630. அறம்முதல் நான்கின் குறைபாடு உடையது காப்பியம் என்று கருதப் படுமே
இது காப்பியம் ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : அறம் முதலிய நான்கனுள் சில குறைந்து வருவது காப்பியம் என்று கருதப்படும் என்றவாறு.
விளக்கம்
பெருங்காப்பியம் என்ற அடை அதனின்றும் பிரிக்கப்பட்ட சிறுகாப்பியம் அடையின்றிக் காப்பியம் என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுதற்கு உதவுகிறது. அண்மைக்காலத்தில் சூளாமணி, உதயணகுமாரகாவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி என்ற ஐந்தும் தமிழில் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளன.
"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே" என்று கொண்ட நம் முன்னோர்கள், அந்நான்கும் குறைவறக் கூறப்பட வேண்டியன என்பதனை உட்கொண்டு அவற்றைக் கூறுவனவற்றிற்கே பெருமை ஆகிய அடை கொடுத்து, ஏனையவற்றிற்கு அவ்வடையினை நீக்கிச் சிறுமை புணர்த்தமை காண்க.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 10, மு. வீ. செய்யுளணி 10
"ஒன்றும் பலவும் பொருளிற் குறைவுறுமேல் என்றும் அதுகாப் பியம்." - மா. 71.