அணியியல் - பொது

49 

இருவகைக் காப்பியமும் இயலுமாறு

 631. அவைதாம்,
      ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
      உரையும் பாடையும் விரவியும் வருமே.

 இது மேலனவற்றிற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.

     இ-ள் :   மேல்கூறிய பெருங்காப்பியமும் காப்பியமும் ஒருவகைச் செய்யுளானும்
 பலவகைச் செய்யுளானும் உரையும் பாடையும் விரவியும் வரும் என்றவாறு.

     உம்மையான், விரவாது வருதலே வலியுடைத்து எனக்கொள்க.             (12) 

விளக்கம்

     ஒரு திறப்பாட்டு - நளவெண்பா முதலியன.

     பலதிறப்பாட்டு - பலவகை விருத்தங்களான் ஆய இராமாவதாரம்,
 சீவகசிந்தாமணி, போல்வன.

     பாட்டும் உரைநடையும் கலந்து அமைந்த தமிழ் நூல்கள் இக்காலத்து வழக்கில்
 இல்லை. தகடூர் யாத்திரை, பாரத வெண்பா என்பன உரையிடையிட்ட பாட்டுடைச்
 செய்யுளாக அமைந்தன என்ப.

     வேற்றுமொழி வாக்கியங்கள் இடைமிடையத் தமிழில் காப்பியங்கள்
 இயற்றப்பட்டனவா என்பது ஆராய்தற்கு உரியது. நாடகங்களில் பிறபாடைமாக்கள்
 கூற்று அமையுங்கால், அவரவர் பாடையில் புகன்றனவாக அமைந்திருத்தல் கூடும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 11

     "தொடர் தொடர்பிற் பாடைஉரை தோய்ந்தும்"                 - மா. 76 

12