50

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

சொற்றொடர் நிலை

 632. செய்யுள் அந்தாதி சொல்தொடர் நிலையே

     இது சொல்தொடர்நிலை ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :   ஒரு செய்யுள் இறுதி மற்றொரு செய்யுட்கு முதலாகத் தொடுப்பது
 சொல் தொடர்நிலைச் செய்யுளாம் என்றவாறு.

     அவை கலம்பகம் முதலியன. இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டு கொள்க.
 ஈண்டு உரைப்பின் பெருகும்.

(13) 

விளக்கம்

     முதற் செய்யுளின் அந்தம் அடுத்த செய்யுளுக்கு ஆதியாக அமைவது
 அந்தாதியாம். திருவாய்மொழியே தமிழில் அந்தாதித் தொடையில்
 அமைந்துள்ளனவற்றில் பெரியது. அந்தாதித் தொடை செய்யுளியலில் கூறப்பட்டுள்ளது.
 கலம்பகம் முதலாக அந்தாதித் தொடையில் பாடப்பட்டுள்ள சிறு காப்பியங்களின்
 இலக்கணங்கள் பாட்டியலில் கூறப்பட்டுள்ளன. அந்தாதித் தொடை அமையப் பாடுவது
 பழந்தமிழில் அருகியே உள்ளது. தமிழில் பழைய உரைநடை அந்தாதித் தொடையில்
 அமைந்துள்ள செய்தி இறையனார் களவியல் உரைப் பகுதிகளால் உணரப்படும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 12

    "சொல்லால் பொருளால் தொடரும் தொடர்நிலைகள்
     எல்லாம் அவற்றுள் எழுத்தசைசீர் - மல்கும்
     அடிசொல் தொடர்நிலைகள் அந்தம் முதலாம்
     படிவைத் தனர்முன் பகுத்து"                                 - மா. 70