அணியியல் - குணவணி

65 

     இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :

    "ஆக்கம் புகழ்பெற்றது ஆவி இவள்பெற்றாள்
     பூக்கட் குழல்கார் பொறைபெற்ற - மாக்கடல்சூழ்
     மண்பெற்ற ஒற்றை குடையாய் ! வரப்பெற்றெங்
     கண்பெற்ற இன்று களி"

 என வரும்.

     [அரசே ! நீ வினைமுற்றி மீண்டு வந்தமையால் புகழ் சிறந்தது; தலைவி
 உயிர்நிலைபெற்றது ; அவள் கூந்தல் பூக்களைச் சூடும் வாய்ப்பினைப் பெற்றது.
 எங்கள் கண்கள்நின்னைக் காண்பதனால் ஆகும் களிப்பைப் பெற்றன - என்ற
 இப்பாடலில் காணப்படும் கடியஓசையைச் சுவையாகக்கொண்டு விரும்புவாரும் உளர்
 ஆதலின், ஒழுகிசைக்கு மறுதலைப்பட்டகடிய ஓசை கௌட நெறியார் மரபாகக்
 கொள்ளப்பட்டுள்ளது. இவ்வின்னா ஓசையைக் கௌடநெறியாரும் வேண்டார் என்று
 தண்டி அலங்காரம் கூறும். மாறன் அலங்காரக் கருத்தும்அதுவே.

     பொய்ந்நிலப்பட்ட இன்னா இசையை மூன்று நெறியாரும் வேண்டார் என்று
 குறிப்பிடும்மாறன் அலங்காரம், அவ்வின்னா இசைக்கு,

    "நாட்டம் களிபற்ற நாவு நசைபற்ற
     ஏட்டில் பலர்கை இணைபற்றத் - தோட்டிலைஞ்சிக்கு
     அன்புற்ற முத்தர் பெருமான் அடிபரவி
     இன்புற் றவர்க்கடிமை யாம்"

 என்ற பாடலை எடுத்துக்காட்டாகத் தரும்.

     ஒழுகிசை இருநெறியாருக்கும் ஒக்கும் என்ற தண்டி யலங்காரக் கருத்தோடும்
 இந்நூல்முரணி உரைப்பது குறித்துணரத்தக்கது.]

     குறிப்பின் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றும் சிறப்புடை மரபின் உதாரம்
 வருமாறு :

         9-10