இது நிறுத்த முறையானே தன்மையது பொது இலக்கணமும் அது தோன்றும்
நிலைக்களம் இத்துணைத்து என்பதும் கூறுகின்றது.
இ-ள் : முற்கூறிய முப்பத்தைந்துனுள் நால்வகைப் பட்ட பொருளும்
உண்மைக்கூறுபாட்டான் விளக்கும் சொல் முறையால் பாடப்படுவது தன்மை என்னும்
அலங்காரம். அது பொருள் முதலிய நான்கும் நிலைக் களமாகத் தோன்றும்
என்றவாறு.
தன்மை எனினும் சொல்நடை எனினும் ஒக்கும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 29 - 30
"திரப்பியம் சாதிதொழில் குணமாந் தன்மை" - வீ. 152
"வழுவா மரபின்எப் பொருளையும் விகாரம்
தழுவா நடைபெறப் புணர்ப்பது தன்மை" - மா. 88
"அதுவே,
ஒண்பொருள் மக்கள் உயிர்உள அஃறிணை
சினைவினை பண்புஇடம் எனவும் செறியும்" - மா. 89
"அவற்றுள்,
பொருளியல்பு ஆண்பெண் எனஇரு புலப்படும்" - மா. 90
"அரும்பெறல் மக்கட் டன்மையும் அற்றே" - மா. 91
"தன்மை அணியே தன்பொருட் குரிய
வன்மை பலவும் வழுவாது உரைத்தலே" - தொ. வி. 327
"எவ்வகைப் பொருளும் எடுத்தன் இயல்பை
அறைவது தன்மையாம் ஆயுங் காலே" - மு. வீ. பொ. 1
"குணம்பொருள் தொழில்குலத் தொடுபுலப் படுமே" - மு. வீ. பொ. 2
"மேவிய சாதி வினைகள தியற்கைத்
தன்மை உரைப்பது தன்மை நவிற்சி" - ச. 119