பொருள் தன்மை வருமாறு :
"நீல மணிமிடற்றன், நீண்ட சடைமுடியன்,
நூல்அணிந்த மார்பன், நுதல்விழியன் - தோல்உடையன்,
கைம்மான் மறியன், கனல்மழுவன், கச்சாலை
எம்மான், இமையோர்க்கு இறை"
என வரும்.
[திருக்கச்சாலை என்னும் பதியில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் நீலகண்டன்; சடையன்; பூணூல் அணிந்த மார்பினன், நெற்றிக்கண்ணன்,மான் குட்டியையும் மழுவையும் கையில் ஏந்தியவன். அவனே தேவருக்கும் இறைவன் ஆவான் - என்ற இப்பாடலில், சிவபெருமான் என்ற பொருளின் தன்மை உள்ளவாறு தெளிவாகக் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் பொருள் தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.]
குணத்தன்மை வருமாறு :
"உள்ளம் குளிர, உரோமம் சிலிர்த்து, உரையும்
தள்ள,விழி நீர்அரும்பத் தன்மறந்தாள்; - புள்அலைக்கும்
தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடம்செய்
பூந்தா மரைதொழுத பொன்"
என வரும்.
[தில்லையம்பதியில் நடனம் செய்யும் பெருமானுடைய திருவடித் தாமரைகளைத் தொழுத தலைவி மனம் குளிர்ந்து மயிர்க்கூச்செறிந்து சொற்கள் தடுமாறிக் கண்ணீர் அரும்பித் தன்னை மறந்து விட்டாள் - என்ற இப்பாடலில், உள்ளம் குளிர்தல், உரோமம் சிலிர்த்தல், சொற்கள் தடுமாறுதல், கண்ணீர் அரும்பல், தம்மை மறத்தல் என்ற அடியார்தம் பண்புகள் உள்ளவாறு கூறப்படுவதன்கண் குணத்தன்மைஅணி கொள்ளப்படும்.] 11-12 |
|
|