சாதித்தன்மை வருமாறு :
"பத்தித்த அகட்ட, கறைமிடற்ற, பைவிரியும்
துத்திக் கவைநாத் துளைஎயிற்ற; - மெய்த்தவத்தோர்
ஆகத்தான், அம்பலத்தான், ஆரா அமுதுஅணங்கின்
பாகத்தான், சாத்தும் பணி"
என வரும்,
[தவத்தோர் மனமாகிய உட்புறத்தும் அம்பலமாகிய புறத்திடத்தும் கலந்திருக்கும் பார்வதி பாகனாகிய சிவபெருமான் சூடும் பாம்புகள், கோடுகள் பொருந்திய வயிற்றை உடையன; கரிய கழுத்தினை உடையன; படத்தின்கண் புள்ளிகளை உடையன; பிளப்பான நாவினை உடையன; உட்டுளை உடைய பற்களை உடையன -என்ற இப்பாடலில்,பத்தித்த அகடு, கறை மிடறு, துத்தி உடைய படம், கவை நா, துளை எயிறு என்பனவற்றைப் பெற்றிருக்கும் பாம்பினது சாதித்தன்மை விளக்கி உரைக்கப்பட்டவாறு.]
தொழில்தன்மை வருமாறு :
"சூழ்ந்து, முரன்று,அணவி, வாசம் துதைந்துஆடித்
தாழ்ந்து, மதுநுகர்ந்து, தாதுஅருந்தும்; - வீழ்ந்துஅவிழ்ந்த
பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத்தார் நீங்காத வண்டு"
என வரும்.
[பாசம் நீங்கிய அடியார்களை விட்டு நீங்காத சிவபெருமானுடைய கொன்றைப் பூமாலையை நீங்காத வண்டு, அம்மாலையையே சுற்றிக்கொண்டு ஒலி எழுப்பி நெருங்கிச்சென்று மணத்தைச் செறிந்து பூவினுள் தாழ்ந்து தேனை உண்ட மகரந்தத்தைத் தின்னும் - என்ற இப்பாடலில், வண்டின் தொழில்களாகிய சூழ்தல், முரலுதல், அணவுதல், வாசத்தில் துதைந்து ஆடுதல், தாழ்தல், மது நுகர்தல், தாது அருந்துதல் என்பன விளக்கிக் கூறப்பட்டவாறு.] 19 |
|
|