அணியியல் - உவமையணி்

83 

உவமையணி - பொதுவியல்பு

 639. பண்பும் தொழிலும் பயனும்என்று இவற்றின்
     ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்து
     ஒப்புமை தோன்றச் செப்பின் அதுவே
     உவமையாம் அதன்திறம் உணர்ந்தனர்கொளலே.

     உவமை கூறுவனவற்றுள் இஃது அதன் பொது இயல்பு கூறுகின்றது.

     இ-ள் : பண்பு முதலிய மூன்றும் காரணமாக ஒன்றாகியும் பலவாகியும் வரும்
 பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை புலப்படப் பாடின் அஃது
 உவமையாம். அதன் கூறுபாடுகள் எல்லாம் உவமை ஒன்றனையே விரித்துக்கூறும்
 தொல்காப்பியம் முதலிய நூல்களான் அறிந்து கொள்க என்றவாறு.

    "வெளிப்படை உவமம் வினைபயன் மெய்உரு
     வெளிப்பட நின்று விளங்குவது ஆகும்."                    - இ. வி. 587

     என அகத்திணையியலுள் நான்கு எனக் கூறி, ஈண்டு மூன்று என்றல் மலைவாம்
 பிறஎனின், மெய்யும் உருவும் பண்பினுள் அடங்குதலின், அடக்கித் தொகுத்துக்
 கூறுதலான் ஆகாது என்க.

     [மெய் என்பது வடிவு; உரு என்பது நிறம். மெய் கட்புலனாதலொடு
 ஊற்றுணர்வுக்கும் உரியது. உரு கட்புலன் ஆதல் ஒன்றுமே உடையது. தலைவன்
 பகற்குறிக்கண் தலைவியின் உருவினைக் காண்டலும் வடிவினைத் தைவருதலும் கூடும்.
 இரவுக் குறிக்கண் உருவினைக் காண்டல் இயலாது; வடிவினையே தொட்டுப்பயிலுதல்
 கூடும். இவ்வேறுபாடு நோக்கி, வடிவும் நிறமும் தொல்காப்பியத்தில் வேறாகக்
 கூறப்பட்டன. ஆனால் பின்னூலார் இவ்விரண்டினையும் பண்பு என்ற ஒன்றாக
 அடக்கிக் கூறுவாராயினர்.]