290

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 73

    "தாங்கும் சமாயிதம் தான்முயல் செய்தி தனதுபயன்
     ஆங்கத னாலன்றி மற்றொன்றி னால்வந்த தாகச்சொல்லல்."     - வீ. 171 

    "ஒருவினை முயன்றத னாலூறு பயனைமற்(று)
     ஒருவினை தரஉறு வதுவே சமாயிதம்."                       - மா. 185 

    "ஒருவன் செய்தற்கு உள்ள காரியம்
     மற்றொரு காரணம் வழிவரும் உதவியின்
     முடிதல் எளிதின் முடிவணி ஆகும்."                          - ச. 83 

    "மற்றொரு ஏது உதவியினால் காரியம் வாயவெளிது
     உற்று முடிதல் எளிதின்முடி பணி."                     - குவ. அ. 57] 

     வரலாறு :

    "அருவியங் குன்றம் அரக்கன் பெயர்ப்ப,
     வெருவிய வெற்புஅரையன் பாவை, -- பெருமான்
     அணிஆகம் ஆரத் தழுவினாள், தான்முன்
     தணியாத ஊடல் தணிந்து"

 என வரும். பிறவும் அன்ன.                                         (49) 

     [பார்வதிக்குக் கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஏற்பட்ட ஊடல் அவர்
 உணர்த்தவும் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை
 இராவணன் பெயர்த்தெடுப்ப, அவ்வசைவினால் அஞ்சிய பார்வதி தான் முன் தணியாத
 ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவினாள் --
 என்ற இப்பாடலில், அரக்கனுடைய செயல் பார்வதியின் ஊடலைத் தணிக்கச்
 சிவபெருமானுக்கு உதவிய செய்தி கூறப்பட்டவாறு.

     சமாஹிதம் என்பது சமாயிதம் என்று திரித்து வழங்கப்பட்டவாறு.]         49