628. பெருங்காப் பியநிலை பேசுங் காலை,
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன்று
ஏற்புஉடைத் தாக முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகித்
தன்நிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்,
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றம்என்று இனையன புனைந்து,
நன்மனம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்மொழி நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியில் புலத்தல் கலவியில் களித்தல்என்று
இன்னன புனைந்த நன்னடைத்து ஆகி,
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி
சந்தியில் தொடர்ந்து, சருக்கம் இலம்பகம்,
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றியது என்ப.
இது பெருங்காப்பியம் ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : பொருங்காப்பியத்து இயல்பு கூறும் இடத்து, வாழ்த்து முதலிய மூன்றனுள் பொருந்துவதாக ஒன்று முன்வர நடந்து, அறம் முதலிய நான்கனையும் பயக்கும் ஒழுகலாறு உடைத்தாய், தனக்கு நிகர் இல்லாத நாயகனை உடைத்தாய், மலை முதலிய இன்னோரன்ன வருணனைகளை உடைத்தாய், நன்மணம் புணர்தல் முதலிய இன்னோரன்ன செய்கைச் சிறப்பு புகழ்ந்து தொடுக்கப்பட்ட நல்லொழுக்கம் உடைத்தாய், மந்திரம் முதலியன சந்திபோலத் தொடர்புபட்டு, சருக்கம் முதலிய கூற்றின ஒரு திறத்தால் பகுக்கப்பட்டு, இடை விடாத எண்வகைச் சுவையும் மெய்ப்பாடும் கேட்போர் மதிக்கப் புலவரால் புனையப்படும் தன்மையினை உடைத்து என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
|
|