634. நெகிழ்இசை இன்றிய செறிவி னானும்
பொருள்புலப் படுக்கும் தெளிவி னானும்
விரவத் தொடுக்கும் சமநிலை யானும்
சொல்லினும் பொருளினும் சுவைபடு நெறியான்
நல்லன தொடுக்கும் இன்பத் தானும்
வெறுத்திசை இல்லா ஒழுகுஇசை யானும்
குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றும்
சிறப்புஉடை மரபின் உதாரத் தானும்
கருதிய பொருளைத் தெரிவுஉற விரித்தற்கு
உரியசொல் உடைய உய்த்தலில் பொருண்மையும்
உலகுஒழுக்கு இறவா உயர்புகழ்க் காந்தமும்
தொகைமிக வரூஉம் தகைமிகு வலியும்
உரியபொருள் அன்றி ஒப்புஉடைப் பொருள்மேல்
தருவினை புணர்க்கும் சமாதியும் எனமுறை
ஆய்ந்தவை தருப்பம் ஐஇரு வகைத்தே.
இது மேல் கூறிய வைதருப்பம் இவ்வியல்பான் இத்துணைத்து என்கின்றது.
இ-ள் : நெகிழ்இசை இல்லாச் செறிவு முதலாகச் சமாதி ஈறாக முறையே ஆராய்ந்த வைதருப்பம் பத்துக் கூற்றினை உடைத்தாம் என்றவாறு.
|