637. தன்மை1 உவமை2 உருவகம்3 தீவகம்4
     பின்வரு நிலையே5 முன்ன விலக்கே6
     வேற்றுப்பொருள்வைப்பே7 வேற்றுமை8 விபாவனை9
     ஒட்டே10 அதிசயம்11 தற்குறிப் பேற்றம்12
     ஏது13 நுட்பம்14 இலேசம்15 நிரல்நிறை16
     ஆர்வ மொழி17 சுவை18 தன்மேம் பாட்டுஉரை19
     பரியா யம்மே20 சமாயிதம்21 உதாத்தம்22
     அரிதுஉணர் அவநுதி23 நிலேடை24 விசேடம்25
     ஒப்புமைக் கூட்டம்26 மெய்ப்படு விரோதம்27
     மாறுபடு புகழ்நிலை28 புகழாப் புகழ்ச்சி29
     நிதரிசனம30 புணர்நிலை31பரிவருத் தனையே32
     வாழ்த்தொடு33 சங்கீ ரணம்34பா விகம்35 எனப்
     போற்றும்ஏ ழைந்தும் பொருள்அணி என்ப.

     இது நிறுத்த முறையானே பொருள்அணி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் :   தன்மைமுதல் பாவிகம் ஈறாகப் பேணிய முப்பத்தைந்தும் பொருள்
 அணி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

     தன்மை இயல்பு ஆகலான்முதற்கண்ணும், உவமை விகாரமாய்
 மிக்கவரவிற்றாய்ப் பிற வக்கிர நடை அலங்காரங்கட்கு உபகாரம் உடைத்து
 ஆகலான் அதன் பின்னும் எண்ணப்பட்டன. ஒழிந்தனவும் இவ்வாறு உய்த்து
 உணர்ந்து கொள்க.

(18) 

     [தண்டியலங்காரம், வீரசோழியம், இந்நூல் இம்மூன்றினும் பொருளணிகள் 35
 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. மாறன் அலங்காரம் 64 பொருளணிகளைக்
 குறிப்பிடுகிறது. தொன்னூல் விளக்கத்தில் 30 பொருளணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 சந்திராலோகத்தில் பொருளணிகள் 100 இடம் பெற்றுள்ளன. குவலயானந்தம்
 120 பொருளணிகளை விளக்குகிறது. முத்து வீரியத்தில் 56 பொருளணிகள்
 புகலப்படுகின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து நோக்கத் தக்காங்கு அமைந்த
 பொருளணிகள 118 கொள்ளத் தக்கன. இந்நூல் குறிப்பிடும் பொருளணிகள்
 அல்லாதன பற்றிய செய்திகளைப் பிற்சேர்க்கையில் காண்க.]