638. அவற்றுள்,
     எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
     சொல்முறை தொடுப்பது தன்மை அதுதான்
     பொருள்குணம் சாதி தொழிலொடு புலனாம்.

 இது நிறுத்த முறையானே தன்மையது பொது இலக்கணமும் அது தோன்றும்
 நிலைக்களம் இத்துணைத்து என்பதும் கூறுகின்றது.

     இ-ள் :   முற்கூறிய முப்பத்தைந்துனுள் நால்வகைப் பட்ட பொருளும்
 உண்மைக்கூறுபாட்டான் விளக்கும் சொல் முறையால் பாடப்படுவது தன்மை என்னும்
 அலங்காரம். அது பொருள் முதலிய நான்கும் நிலைக் களமாகத் தோன்றும்
 என்றவாறு. தன்மை எனினும் சொல்நடை எனினும் ஒக்கும்.