640. உற்றபண்பு ஆதியின் உவமம் செய்வுழி
     மற்றுஅவை வெளிப்பட வகுத்தவிரி உவமமும்1
     அன்னவை போலாது ஆங்குஅவை கரப்பத்
     தொன்நெறிப் புலவர் தொகுத்ததொகை உவமமும்2
     பொருள்உவமை ஆகியும் உவமை பொரு ளாகியும்
     ஒருதொடர் இடைவரூஉம் இதர விதரமும்3
     அதனான் அன்றி அதனைஇஃது ஒப்பது
     இதனானும் ஒக்கும் எனும்சமுச் சயமும்4
     மேதகு உவமையை விலக்கிஅப் பொருளையே
     ஓதி முடிக்கும் உண்மை உவமையும்5
     ஓதிய பொருள்தனக்கு ஒப்பதுஓர் பொருள்பின்
     நீதியின் நிறீஇய மறுபொருள் உவமையும்6
     நினைந்துஉவ மிக்கும் நிலையில்மற்று அதனை
     புனைந்து உவமிக்கும் புகழ்உவமை யானும்7
     சிந்தித்து ஒருவன் சேர்ப்பதுஓர் உவமையை
     நிந்தித்து உரைக்கும் நிந்தை உவமையும்8
     அறிவுஉறின் அதனுக்கு இதுவே ஒப்புஎன
     நெறிஉறப் புணர்க்கும் நியம உவமையும்9
     இதுவே அன்றி இதனுக்கு இதுபோன்று
     அதுவும் ஆம்எனும் அநியம உவமையும்10
     எய்திய உவமையும் இயைந்திடு பொருளும்
     ஐயுற விளம்பும் ஐயநிலை உவமையும்11
     இவ்வியல் அதனால் இதுஅன்று இதுஎனச்
     செவ்விதின் தெளிந்த தேற்ற உவமையும்12
     ஆற்ற உவமை ஆற்றினும் பொருளின்
     ஏற்றம்இன்று என்னும் இன்சொல் உவமையும்13
     ஊறுஇல் உவமேயம் உவமையாய் உலகியல்
     வேறுபட மாட்டிய விபரீத உவமையும்14
     அரும்பொருள் அதனை அதுபோலும் என்ன
     விரும்பும்என் உளம்எனும் வேட்கை உவமையும்15
     ஒருபொருள் அதனுக்கு ஒப்பதுஒன்று அன்றிப்
     பலபொருள் காட்டும் பலபொருள் உவமையும்16
     கூறுபடும் உவமையின் கொள்கைபிறிது ஆக
     வேறுபடுத்து இசைக்கும் விகார உவமையும்17
     ஒருபொருள் மீதுஎழு வேட்கையான் மயக்கம்
     முறுகுதல் காட்டும் மோக உவமையும்18
     அவனியில் இல்லா அன்னதுஓர் பொருளை
     உவமைசெய்து உரைக்கும் அபூத உவமையும்19
     சொல்லிய உவமம் தொறும்தொறும் போலி
     புல்லப் புணர்க்கும் பலவயின் போலியும்20
     ஒருதொடர் அதன்கண் உவமைதொறும் இன்றி
     ஒருவயின் புணர்க்கும் அருவயின் போலியும்20
     ஒருதொடர் அதன்கண் உவமைதொறும் இன்றி
     ஒருவயின் புணர்க்கும் ஒருவயின் போலியும்21
     கூடாத அதனைக் கூடுவது ஆக்கிக்
     கோடாது உவமைசெய் கூடா உவமையும்22
     ஒருதலை யாக உவமையை மறுத்துப்
     பொருளையே உவமைசெய் பொதுநீங்குவமையும்23
     ஒருபொருட்கு உவமை ஒருங்குபல வரின்அவை
     வருதொடர் பாய்இறூஉம் மாலை உவமையோடு24
     அற்புதம்25 சிலேடை26 அதிசயம்27 விரோதம்28
     ஒப்புமைக் கூட்டம்29 தற்குறிப்பு ஏற்றம்30
     விலக்கே31 ஏது32 என விளம்பிய எட்டும்
     உளப்படத் தொகைஇ உரைத்தஎண் ணான்கும்
     விளக்கிய உவமையின் விரிஎனப் படுமே.

     இஃது உவமைவிரி இத்துணைத்து என்கிறது.்

     இ-ள் : மேல் கூறப்பட்ட பண்பு முதலிய மூன்றானும் உவமம் செய்யும் இடத்து
 அப்பண்பு முதலிய வெளிப்பட வகுத்த விரி உவமை முதலாக மாலை உவமை
 ஈறாகக் கிடந்த இருபத்து நான்கோடு அற்புதம் முதலாகக் கூறிய எட்டும் கூடத்
 தொகுத்தலான் இங்ஙனம் கூறப்பட்ட முப்பத்திரண்டும் முன் விளக்கிய உவமை
 அலங்காரத்தின் விரி எனப்படும் என்றவாறு.