642. போல மறுப்ப ஒப்பக் காய்ப்ப
     நேர வியப்ப நளிய நந்த,
     கடுப்ப ஏய்ப்ப மருள புரைய
     ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப,
     அன்ன ஆங்கு மான விறப்ப
     என்ன உறழத் தகைய நோக்க,
     எள்ள விழையப் புல்லப் பொருவக்
     கள்ள மதிப்ப வெல்ல வீழ, என்று
     ஈரெட்டும் எட்டும் இருநான்கும் முறையே
     தத்தம் மரபின் சாற்றும்மூன்று உவமைக்கும்
     ஒத்த உருபாம்; உரைத்தமுத் திறத்தினும்
     ஒன்ற நடுங்க ஏர ஏற்ப
     வென்ற நாட மாற்றப் பொற்ப
     ஆர அமர அனைய அவற்றோடு,
     எதிர ஏய இயைய இகலத்
     துணைப்ப மலையத் தூக்கே செத்தொடு
     கெழுதேர் நகைமிகு சிவண்நிகர் இன்னவும்,
     இன்னன பிறவும், எய்துதல் உரிய

     இது மேற்கூரிய உவமைகளை வரையரை வகையானும் அஃது இன்மையானும்
 புலப்படுத்தும் உருபுகள் இவை என்கின்றது.

     இ-ள் :   போல என்பது முதலிய பதினாறும் அன்ன என்பது முதலிய எட்டும்
 என்ன என்பது முதலிய எட்டும் முறையே தம்முடைய வரலாற்று முறைமையானே
 முற்கூறிய உருப் பற்றியும் வடிவு பற்றியும் வரும் பண்பும், தொழிலும் பயனும் ஆகிய
 மூன்று உவமைக்கும் பொருந்திய உருபுகளாம். இங்ஙனம் கூறிய மூவகை
 உவமத்தின்கண்ணும் ஒன்ற என்பது முதல் இன்ன என்பது ஈறாகக் கிடந்த
 இருபத்தாறும் இவைபோல்வன பிறவும் உருபு ஆதற்குப் பொருந்துதல் உரியவாம்
 என்றவாறு.

     இங்ஙனம் வரையறுத்தல் கடப்பாடு அல்லது வேறு காரணம் இன்று என்பார்.
 "தத்தம் மரபில் சாற்றும்" என்றும், இவையும் இவைபோல்வன பிறவும் உருபாம்
 இடத்து வினையெச்ச நீர்மையவாயும் பெயரெச்ச நீர்மையவாயும் முற்றுநீர்மையவாயும்
 இடைச்சொல் நீர்மையவாயும் வரும் என்பார் உருபு என்று ஒழியாது "உருபாம்"
 என்றும் கூறினார்.