நிறுத்தமுறையானே முன்னவிலக்கு அலங்காரம் பற்றிக் கூறுவனவற்றுள், இஃது
அதன்பொது இலக்கணமும் அதன் திறனும் கூறுகின்றது.
இ-ள்: ஒரு பொருளைக் குறிப்பினான் விலக்கின் முன்னவிலக்கு என்னும்
அலங்காரமாம். அவ்வலங்காரம்தான் மூவகைக் காலத்தொடும் பொருந்திப்
பொருள் முதலிய நான்கனோடும் கூடி நடக்கும் என்றவாறு.
பொருள் பொலிவும் செய்யுள் சிறப்பும் நோக்கிக் குறிப்பினை
எடுத்துஓதினாரேனும், மறுப்பது என்னாது "மறுப்பின்" என்ற மிகையானே,
அதன் மறுதலையாகிய வெளிப்படையான் மறுப்பதூஉம் கொள்க.