651. முன்ஒன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்
பின்னர் ஒருபொருள் உலகுஅறி பெற்றியின்
ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பது
முழுவதும் சேறல் ஒருவழிச் சேறல்
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல்
கூடா இயற்கை கூடும் இயற்கை
இருமை இயற்கை விபரீதப் படுதல் என்று
இனையஓர் எட்டின் இயல்பினது என்ப.
நிறுத்தமுறையானே இது வேற்றுப்பொருள் வைப்பின் பொதுவிதியும் அதன்விரியும் கூறுகின்றது.
இ-ள் : முன் ஒரு பொருள்திறம் தொடங்கிப் பின்னர் அதனை முடிப்பதற்கு ஆற்றலுடைய பிறிது ஒரு பொருளை உலகு அறியும் இயல்பான் ஏறிட்டுவைத்து மொழிவது வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அலங்காரமாம். அவ்வேற்றுப்பொருள்வைப்பு, ஒரு திறம் உரைத்தால் அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச்செல்லவைத்தலும், அவ்வாறு அன்றிச் சிலவற்றின்மேல் செல்லவைத்தலும், தம்முள் மாறுபட்டுத் தோன்ற வைத்தலும், முன்னர்வைத்த பொருளையும், பின்னரதனையும் ஒருசொல் தொடர்பான் முடிய வைத்தலும், கூடாத இயல்பைக் கூடுவதாக வைத்தலும், கூடும் இயல்பைக் கூடுவதாக வைத்தலும், கூடாத இயல்பையும் கூடு் இயல்பையும் கூடுவதாக ஒருங்கு வைத்தலும், நல்வினைப் பயன் தீதாகவும் தீவினைப்பயன் நன்றாகவும் வைத்தலும் என்று சொல்லப்பட்ட இத் தன்மையவாகிய எண்வகைத் திறத்தினை உயையதாம் என்றவாறு. |
|
|