653. உலகுஅறி காரணம் ஒன்றுஒழித்து உரைப்புழி,
வேறுஒரு காரணம், இயல்பு, குறிப்பின்,
வெளிப்பட உரைப்பின், அது விபாவனை ஆகும்.
இது நிறுத்தமுறையானே விபாவனை அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : ஒன்றன் வினை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறியவரும்
காரணத்தை ஒழித்துப் பிறிது ஒரு காரணத்தினை இயல்பினான் ஆக., குறிப்பினான்
ஆக வெளிப்பட உரைப்பது விபாவனை என்னும் அலங்காரம்ஆம் என்றவாறு.
[உலகத்தார் குறிப்பிடும் காரணத்தை விடுத்துக் கவிதன் கற்பனையால் விசேடமாக
எண்ணிச் சொல்வது விபாவனையாம். குறிப்பினால் ஆராய்ந்து காரணத்தை
உணருமாறு அமைப்பது சிறப்புடைத்து. இஃது பிறிதாராய்ச்சியணி எனவும் கூறப்பெறும்.