நிறுத்தமுறையானே இஃது ஒட்டு என்னும் அலங்காரத்தின் பொதுவிதியும்
அதன்விரியும் கூறுகின்றது.
[இ-ள் :] கவிதன்னால் கருதப்பட்டபொருளை மறைத்து அதனை
வெளிப்படுத்துவதற்கு ஒத்த பிறிது ஒன்றனைச் சொல்லின் அஃது ஒட்டு என்னும்
அலங்காரமாம். அவ்வலங்காரம் கூறுகின்ற பொருளும் அதன்அடையும்
வேறுபடத் தொடுப்பதும், அடைபொதுவாய்ப் பொருள் வேறுபடத் தொடுப்பதும்,
அடை விரவிப் பொருள் வேறுபட மொழிவதும், அடை விபரீதப் பட்டுப் பொருள்
வேறுபட மொழிவதும் என நான்கு வகையான் நடக்கும் என்றவாறு.
"ஒத்தது ஒன்று உரைப்பின்" எனப் பொதுப்படக் கூறிய அதனால், இஃது
அகத்திணைபற்றி வருங்கால் புள் முதலிய கருப்பொருள் நிலனாகப்
புலப்படுத்தலும், புறத்திணைப்பற்றி வருங்கால் யாதானும் ஒத்தது ஒன்று
நிலனாகப் புலப்படுத்தலும் கொள்க.
ஒட்டு எனினும், உள்ளுறை உவமம் எனினும், உவமப்போலி எனினும், பிறிது
மொழிதல் எனினும், நுவலா நுவற்சி எனினும் ஒக்கும்.