656. பெயர்பொருள் அல்பொருள் எனஇருபொருளினும்
          இயல்பின விளைதிறன் அன்றிப் பிறிதுஒன்று
          தான்குறித்து ஏற்றல் தற்குறிப்பு ஏற்றம்;
          அதுவே,
          அன்ன போல்எனும் அவைமுத லாகிய
          சொல்நிலை விளங்கும் தோற்றமும் உடைத்தே.

     இது நிறுத்தமுறையானே தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் ஆமாறும் அதன்
 ஒழிபும் கூறுகின்றது.

     இ-ள் : இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய இருகூற்றுப்
 பொருளின்கண்ணும், இயல்பினான் நிகழும் தன்மை ஒழியக் கவி தன்னான் பிறிது
 ஒன்றைக் கருதி, அவற்றுக்கண் ஏற்றிச் சொல்லுவது தற்குறிப்பேற்ற அலங்காரமாம்.
 அவ்வலங்காரம் அன்ன போல் என்பன முதலிய உவமச்சொல் புணர்த்து விளங்கும்
 தோற்றமும் உடைத்து என்றவாறு.

     [இதனைத் தொன்னூல் விளக்கம் ஊகாஞ்சிதம் என்று குறிப்பிடும். வீரசோழியம்
 நோக்கு என்னும்.