நிறுத்தமுறையானே ஏது அலங்காரம் கூறுவனவற்றுள், இஃது அதன் பொது
இயல்பும் வகையும் விரியும் கூறுகின்றது.
இ-ள் : யாதாளும் ஒரு பொருள்திறத்து இதனான் இது நிகழ்ந்தது என்று
காரணம், மிகுத்துச் சொல்லுவது ஏது என்னும் அலங்காரமாம். அது காரகஏது என்றும்
ஞாபகஏது என்றும் இரண்டாம். அவற்றுள் கருத்தாவும் செயப்படுபொருளும்
கருமமும் கருவியும் ஏற்பதும் நீக்கமும் என்று சொல்லப்பட்ட இவை ஆறும் காரக
ஏதுவாம். அவ்வாறும் அல்லாத பிற காரணங்களால் உய்த்து உணரத்தோன்றுவது
ஞாபக ஏதுவாம் என்றவாறு.
நிலனும் பொழுதும் இத்துணைச் சிறப்பு இன்மையின் எடுத்து ஓதார் ஆயினார் ;
அவையும் காரக ஏதுவாதல் கொள்க.
[முதல்வன் - கருத்தா -- முதல்வேற்றுமை.
பொருள் - செயப்படுபொருள் இரண்டாம் வேற்றுமை.
கருமம் - செய்யப்பட்ட செயல்
கருவி -- காரணங்களுள் ஒன்று - மூன்றாம் வேற்றுமை.
ஏற்பது -- நான்காம் வேற்றுமை.
நிலன் -- பொழுது -- ஏழாம் வேற்றுமை.
எனவே, ஆறாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமை நீங்கலான ஏனைய; காரகம்
ஏதுப்பொருளில் வரும். "முதல்வனும் கருமமும் கருவியும் ஏற்பதும், நீக்கமும் இடமும்
என இவை காரகம்" என்ற பாடமும் உண்டு.]