661. குறிப்புவெளிப் படுக்கும் சத்துவம் பிறிதின்
     மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்.

     நிறுத்த முறையானே இஃது இலேசம் என்னும் அலங்காரம் உணர்த்துகின்றது.

     இ-ள் : கருதியது வெளிப்படுக்கும் சத்துவங்களைப் பிறிது ஒன்றினான்
 நிகழ்ந்தனவாக மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அலங்காரமாம் என்றவாறு :

     சத்துவம் என்பன வெண்பளிங்கில் செந்நூல் கோத்தால், அதன் செம்மை புறம்
 பொசிந்து தோன்றினாற்போல, கருதியது புலன் ஆக்கும் குணங்கள். அவை,
 சொல்தளர்வு, மெய்விதிர்ப்பு, கண்ணீர்நெகிழ்ச்சி, மெய்வெதும்பல், மெய்ம்மயிர்
 அரும்பல் முதலாயின.

     [இது வஞ்சநவிற்சியணி எனவும் கூறப்படும்.]