666. தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.

     இது நிறுத்தமுறையானே தன்மேற்பாட்டுரை அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :  ஒருவன் தன்னைத் தானே மேம்பாடு தோன்ற உரைப்பது
 தன்மேம்பாட்டுரை என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     இஃது அகத்திணைப் பொருள்பற்றி வருங்கால் தலை மகன் தன்னைத்தானே
 புகழ்தல் எனவும், புறப்பொருள் பற்றி வருங்கால் நெடுமொழிகூறல் எனவும்
 பெயர் பெற்று வரும் எனக்கொள்க.

     [இவ்வணி ஊக்கம் எனவும் நெடுமொழி எனவும் கூறப்பெறும்.
 தலைவன் தோழியிடம் தன் பெருமையைக் கூறுதல் அகத்திணைக்கண் காணப்படுவது.
 வீரன் எதிர்த்த பகைவரிடமும், போருக்குப் புறப்படும்போதும் தன்
 பெருமையைக் கூறுவது புறத்திணைக்கண்ணது.