691. பிரிபொருள் சொற்றொடர்1 மாறுபடுபொருள்மொழி2
     மொழிந்தது மொழிவே3 கவர்படு பொருள்மொழி4
     நிரல்நிறை வழுவே5 சொல்வழு6 யதிவழு7
     செய்யுள் வழுவே8 சந்தி வழு9 என
     எய்திய ஒன்பதோடு இடனே10 காலம்11
     கலையே12 உலகம்13 நியாயம்14 ஆகமம்15
     எனமலைவு இருமூன்றும் வரைந்தனர் புலவர்.


     இது மேற்கூரிய அணிபெறும் செய்யுட்குப் பொருந்தாத குறறமாவன இவை என்று
 தொகுத்து உணர்த்துகின்றது.

     இ-ள் : பிரிபொருள் சொல் தொடரும், மாறுபடு பொருள் மொழியும்,
 மொழிந்தது மொழிதலும், கவர்படு பொருள்மொழியும், நிரல்நிறை வழுவும்,
 சொல்வழுவும், யதிவழுவும், செய்யுள் வழுவும், சந்தி வழுவும் எனச் செல்லப்பட்ட
 வழு ஒன்பதனோடு, இடமலைவும், கால மலைவும், கலைமலைவும், உலகமலைவும்,
 நியாயமலைவும், ஆகமமலைவும் என்னும் மலைவு ஆறும் உள்ளிட்ட பதினைந்தும்
 அவ்வணிபெறும் செய்யுட்கு ஆகா என்று களைந்தனர் புலவர் என்றவாறு.

     ஒன்பதும் ஆறமாகப் பிரித்து ஓதினார், முன்னர் ஒன்பதும் பெரும்பான்மையும்
 குற்றமாகச் சிறுபான்மை ஒரோவிடத்துக் குணம் ஆதலும், பின்னர் ஆறும் ஒரு
 தலையாகவே குற்றமாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்துரையாகப் புணர்க்கவல்ல
 புலவரால் சிறுபான்மை மொழியப்படுதலும் ஆம் என்றற்கு. அஃதேல், இக்குற்றம்
 செய்யுள் நோக்கி வருவன ஆகலின் செய்யுளியலுள் கூறாது ஈண்டுக் கூறியது
 என்னைஎனின், நன்று சொன்னாய் ! செய்யுள் என்பது சட்டகம் ; அலங்காரம்
 என்பன அச்சட்டகத்தைப் பொலிவு செய்வன ஆகலான், அச்செய்யுட்குப் பொலிவு
 உணர்த்திப் பொலிவு அழிவும் ஈண்டே கூறப்பட்டன. அன்றியும், பொருளை
 விளக்குவது அணிக்கு இலக்கணமாகக் கூறி, மீட்டும் அப்பொருளுக்கு இடம் ஆகிய
 செய்யுளை விளக்குவதும் அதற்கு இலக்கணமாகக் கூறினமையான், ஈண்டுக் கூறினார்
 எனினும் அமையும். ஆதலான் அப்பொலிவிற்கு வழா நிலை தனித்தனியே
 எடுத்துக்கூறி அதன் ஒழிபாகிய வழுவும் வழுவமைதியும் தொகுத்துக் கூறினார்
 என்பதூஉம் ஆயிற்று.

(72)