706. நியாயம் என்பது நெறியுறக் கிளப்பின்
     அளவையின் தெளிக்கும் விளைபொருள் திறம்;அவை
     மாறுபட உரைப்பது அதன்மலைவு என்ப.

     இதுவும் அது.

     இ-ள் : நியாயம் என்று சொல்லப்படுவது இலக்கண வகையான் கூறுங்கால்
 காண்டல் முதலாகிய அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களது
 முடிவின் கூறுபாடாம்; அவற்றை அவ்வவர் கூறியவாறு கூறாது மாறுபடக் கூறுவது
 அதன் மலைவ என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

     அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களாவன அறுவகைப்பட்ட
 சமயங்களின் முடிவாகிய பொருள்களின் தோற்றமும் நிலையும் அழிவும் இன்னவகைய
 என்ற கூறதல்.