100

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     இ-ள் : தாழிசையும் துறையும் விருத்தமும் என்று இம்மூன்றும் பா இனம்
எனப்படும். அவை பாவினொடு கூடி அப்பெயர் பெற்று நடக்கும் என்றவாறு.

     அங்ஙனம் வழங்குமாறு வெண்தாழிசை வெண்துறை வெளி விருத்தம் எனவும்,

     ஆசிரியத்தாழிசை ஆசிரியத்துறை ஆசிரிய விருத்தம் எனவும்,

     கலித்தாழிசை கலித்துறை கலி விருத்தம் எனவும்,

     வஞ்சித்தாழிசை வஞ்சித்துறை வஞ்சி விருத்தம் எனவும் கொள்க.

18

விளக்கம்

     நிறுத்த முறை - முதல்நூற்பா.

     ஒவ்வொரு பாவிற்கும் தாழிசை துறை விருத்தம் என்ற இனங்கள்
கூறப்பட்டுள்ளன. இங்ஙனம் பாஇனம் வகுத்தல் தொல்காப்பியனாருக்கு உடன்பாடன்று.
பா இனம் வகுத்தல் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. இப்பா இனங்களின்
இலக்கணங்களை நோக்க இவற்றின் அமைப்பிற்கும் பெயருக்கும் பொருத்தம்
பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகப் போதரும். எனினும் பல நூற்றாண்டுகளாகப்
பழகிவிட்டபடியால் இவற்றை நாம் இப்பொழுது கொள்ளவேண்டியவராயுள்ளோம்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - யா. வி. 56

 

`வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
என்றிம் முறையின் எண்ணிய மும்மையும்
தத்தம் பெயரான் தழுவும் பெயரே.'
 
 

- காக்கை.

 

 

`பாவே, தாழிசை, துறையே, விருத்தம்என,
நால்வகைப் பாவும், நானான்கு ஆகும்.'
 
 

- சிறுகாக்கை