54 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | நாலசையானும் ஓரசையானும் சீராம் தன்மை தோன்ற நடப்பது பொதுச்சீர் எனப்படும்; அது நேர் நேர் நேர் நேராயும், நிரைநேர் நேர்நேராயும், நிரை நிரை நேர்நேராயும், நேர் நிரை நேர்நேராயும்; நேர்நேர் நிரைநேராயும், நிரைநேர் நிரைநேராயும், நிரைநிரை நிரைநேராயும், நேர்நிரை நிரைநேராயும், நேர்நேர்நேர் நிரையாயும், நிரைநேர் நேர்நிரையாயும், நிரை நிரைநேர் நிரையாயும், நேர்நிரைநேர்நிரையாயும், நேர்நேர்நிரை நிரையாயும், நிரைநேர் நிரைநிரையாயும், நிரை நிரை நிரை நிரையாயும், நேர்நிரைநிரை நிரையாயும், தம்மிற்கூடிப் பதினாறு சீறாய் நடத்தலும், நேராயும் நிரையாயும் இரண்டு சீராய் நடத்தலும், முறை என்றவாறு. `சீர்பெற' என்ற மிகையானே வெண்பாவினுள் நாலசைச் சீர்வாரா; ஆசிரியத்துள்ளும் குற்றுகரம் வந்துழி அன்றி வாரா; கலியுள்ளும் பெரும்பான்மையும் குற்றுகரம் வந்துழி அன்றி வாரா; வஞ்சியுள் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச் சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும் பெறும்; அல்லனவற்றுள் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்று அன்றி வாரா; இரண்டு வரினும் கண்ணுற்று நில்லா; பாவின் துணைப் பாவினத்துள்ளும் பயின்று வாரா; நிரை ஈற்றுப் பொதுச்சீர் எட்டும் வஞ்சியுள் அல்லது வாரா எனவும் கொள்க. ஈரசைச் சீர் எல்லாச் செய்யுளுள்ளும் பயின்று இனிது நடத்தலின் இயற்சீர் என்றும், மூவசைச் சீர் எல்லாச் செய்யுளுள்ளும் வரும் எனினும் வெண்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் உரிமை பூண்டு நிற்றலின் உரிச்சீர் என்றும் ஏனைய பொதுவாய் நிற்றலின் பொதுச்சீர் என்றும் ஆயின. | |
|
|