New Page 1

102 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

பால் பொருத்தம்

 

773. ஆடூஉக் குறில்நெடில் மகடூஉ

    பேடுஒற்று ஆய்தம் பெண்ஆண் புகழ்ச்சிக்கு

    அவ்வெழுத்து மயங்கினும் அமையும் என்ப

 

இது நிறுத்த முறையானே பால்பொருத்தம் ஆமாறு கூறுகின்றது-

 

     இ - ள்: குற்றெழுத்து ஐந்தும் ஆண்பாலாம்; நெட்டெழுத்து ஏழும்
பெண்பாலாம்; ஒற்றும் ஆய்தமும் பேடாம். ஆண்பாலைக் கூறுமிடத்து
ஆண்பால் எழுத்துக்களாம்; பெண்பாலைக் கூறுமிடத்துப் பெண்பால்
எழுத்துக்களாம்; மயங்கினும் ஆம் என்றவாறு.

 

     ஒற்றும் ஆய்தமும் முதலாகா எனினும் பால் உரிமை கூறும் முகத்தான்
உரிமை கூறினார். மேலும் இவ்வாறு பின்னுள்ளோர் கூறியவாறே கூறினும்
பயனில் கூற்றென விலக்கற்பால அல்ல என்று உய்த்துணர்ந்து
கொள்க.                                  

 (13)

விளக்கம்

 

     ஒற்றும் ஆய்தமும் பேட்டிற்கு உரிய முதல் எழுத்துக்கள் முதலாக
வாராதது போலவே பேடுபற்றிப் பாடல்களும் பாடுவார் ஒருவரும் இரார்
என்பதும், பாடுங்கால் பேட்டினை ஆணாக ஆவது பெண்ணாக ஆவது
உடல் அமைப்புப்பற்றி அமைத்துப் பாடுங்கால் அவ்வப்பாலுக்கு உரிய
எழுத்துக்களைக் கொள்வர் என்பதும் உய்த்து உணரப்படும்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

    ‘ஆண்பால் பெண்பால் அலிஎன நின்ற

     மூன்றே பால்என மொழிந்தனர் புலவர்.’

                                      - பன். பாட். 45