பாட்டியல் - நூற்பா எண் 37, 38

133


                                 

பாட்டுடைத் தலைவன் சச்சந்தன்; அவன் பிறந்தநாள் பரணி; அதன் இராசி
மேடம்; அதற்கு எட்டாம் இராசி விருச்சிகம். அதற்குரிய நாள்கள் விசாகம்
நான்காம் பாதம், அனுடம், கேட்டை என்பன; அவற்றிற்கு உரிய
எழுத்துக்கள் தே தை, ந நா நி நீ நு நூ, நெ நே நை என்பன. இவற்றைப்
பாடல் முதல் சீரின் முதலெழுத்தாகக் கோடல் கூடாது. வைநாசிகமாவது
அவிட்ட நாளின் நான்காம் கூறு; அதற்கு உரிய எழுத்து ஞொ என்பது
இவ்வெழுத்தும் பாடல் முதற்சீர் முதலெழுத்து ஆதல் கூடாது.
வழக்கம்போலத் தீக்கணம், அந்தரகணம், சூரியகணம், மாருதகணம்
இவற்றிற்குரிய நாள்களாய் முறையே அமைந்த கார்த்திகை புனர்பூசம், பூசம்
சுவாதி என்பனவற்றிற்கு முறையே அமைந்த அ ஆ இ ஈ; கெ கே கை;
கொ கோ கௌ; த தா என்பனவும் விலக்கிக்கொள்ளப்படும்.

 

     இது முற்கூறிய எழுத்துப் பொருத்தத்தோடு தொடர்பு கோடல்
பருந்தின் வீழ்வாம்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘அட்டமராசி வைநா சியக்கால்,

     விட்டனர் பின்னர் மேவினர் கொளலே.’

- பன். பாட். 93

 

     ‘அட்டமராசி வைநாசிய மிவையும்

     விட்டொழித்தல் நன்றெனவே வேண்டு.’

                                      - வெண். பாட். 18

 

     ‘அட்டமராசி வைநாசிகம், கழிந்தன நின்றன’  

- நவ. 19

     ‘எட்டாம் கூர்இராசியும் வைநாசிகமும் ஆகா’ 

 - சித. பாட். 24

                                                     37

 

தேவர் கதியும் மக்கள் கதியும்

 

798. ஈறில் வன்மை குறில்இமை யோர்க்காம்;

    கூறும் நெடில்முதல் நான்கும் மென்மை

    அந்தம் ஒன்றுஒழித்து அல்லன மக்கள்;

    முந்தும் கதிஇவை முதல்மொழிக்கு ஆகும்.