138 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
கணப் பொருத்தம்
800. ஆதியும் இடையும் இறுதியும் முற்றும்
ஓதிய நேரும் நிரையும் உற்றிடின்
நீர்தீ மாகம் நிகரில் சுவர்க்கம்
மாமதி பரிதி வாயு பூகணம்
ஆம்முற்று ஆதி யாம்முதற் சீர்க்கே.
இது நிறுத்த முறையானே கணப் பொருத்தம் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: ஆதியினும் இடையினும் இறுதியினும் முற்றினும் மேல்
செய்யுளியலில் கூறிய நேரசையும் நிரையசையுமாய் வரின் ஆதிநேர்
நீர்க்கணம் எனவும், இடைநேர் தீக்கணம் எனவும், இறுதிநேர் ஆகாயகணம்
எனவும், முற்றுநேர் சுவர்க்க கணம் எனவும், ஆதிநிரை சந்திரகணம்
எனவும், இடைநிரை சூரியகணம் எனவும், இறுதிநிரை வாயுகணம் எனவும்
முற்றுநிரை பூகணம் எனவும் ஆகும்; இவற்றுள் முற்றுநேரும் முற்று நிரையும்
ஆதிநேரும் ஆதிநிரையும் முதற்சீர்க்குப் பொருத்தம் உடையனவாம்
என்றவாறு.
‘நீரது கணமே சீர்சிறப்பு எய்தும்;
தீயின் கணமே நோயது சேரும்;
அந்தர கணமே வாழ்நாள் அகற்றும்;
இந்திர கணமே பெருக்கம் செய்யும்;
சந்திர கணமே வாழ்நாள் தரூஉம்;
சூரிய கணமே வீரியம் போக்கும்;
மாருத கணமே சீர்சிறப்பு அகற்றும்;
நிலக்கணந் தானே மலர்த்திரு விளங்கும்.’
என்றார் மாமூலர்.
|