பாட்டியல் - நூற்பா எண் 153 

345


 

          இ - ள்: புல்லும் மரனும் ஓரறிவுயிர் எனவும், முரளும் நந்தும் ஈரறிவுயிர் எனவும், சிதலும் எறும்பும் மூவறிவுயிர் எனவும், ஞெண்டும் தும்பியும் நான்கறிவுயிர் எனவும், மாவும் மக்களும் ஐயறிவுயிர் எனவும், அவ்வகை இரண்டில் மக்கள் ஆறறிவுயிர் எனவும் வகுக்கப்படும் என்றவாறு.

 

 (153)

                                             

  விளக்கம்

 

     புல்லும் மரனும் ஊற்றுணர்ச்சி ஒன்றே உடையன.

 

     நந்தும் முரளும் உணவு உட்கொள்ளும் நாவுணர்வோடு, ஒன்று
தாக்கியவழி அறியும் ஊற்றுணர்வும் உடையன.

 

     சிதலும் எறும்பும் உற்றுணர்தல், நாச்சுவை கோடல் இவற்றுடன் நெய் உள்வழி மோந்து அறிதலாகிய மூக்கு உணர்வும் உடையன. இவை ஒன்று தாக்கியவழி அல்லது அறியாமையின் கண்ணுணர்வும், உரப்பியவழி ஓடாமையின் செவி உணர்வும் உடையன அல்ல.

 

     நண்டும் தும்பியும் மெய் உடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் நா உணர்வும், நாற்றம் கோடலின் மூக்கு உணர்வும், கண்ணுடைமையின் கண்ணுணர்வும் உடையன.

 

     மக்களுள் ஐயறிவுடையார் மாக்கள் எனவும், ஆறறிவுடையோரே
மக்கள் எனவும் கூறப்படுப.

 

     முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த
ஆடூஉ மகடூஉ மக்கள் எனப்படுப. ஆறு உணர்வினுள் குறைவுபட்டாரைக்
குறைந்தவகை அறிந்து அவ்வப்பிறப்பினுள் சேர்த்திக் கொள்ளப்படும். அவை
ஊமும் குருடும் செவிடும் போல்வன

 

 

  ஒத்த நூற்பாக்கள்

 

     ‘புல்லும் மரனும் ஓரறி வினவே;

     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’                    

 - தொல். பொ. 583