பாட்டியல் - நூற்பா எண் 165  

359


 

  அரசர் இயல்

 

925. படையுங் குடையுங் கொடியும் முரசும்

    நடைநவில் புரவியுங் களிறுந் தேருந்

    தாரும் முடியும் நேர்வன பிறவுந்

    தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

 

    இதுவும் அது.                                     

 (165)

  விளக்கம்

 

     ‘கொடிப் படையும் குடையும் கொடியும் முரசும் குதிரையும் யானையும்
தேரும்தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரிய என்றவாறு.
 
     பிறவும் என்றதனால் கவரியும் அரியணையும் அரண் முதலாயினவும்
கொள்க. ‘தெரிவுகொள் செங்கோல் அரசர்’ என்றதனானே செங்கோல்
கொள்ளப்பட்டது.
 
     தார் எனவே போர்ப்பூவும் தார்ப்பூவும் அடங்கின.
 
     ‘புரவி களிறு எனத் தனித்தனியே கூறியதனால் அரசனுக்கு உரிய
மேம்பட்ட இலக்கணங்கள் சான்ற புரவியும் களிறும்
கொள்ளப்படும்.அவற்றிற்கும் பட்டம் சார்த்தப்பட்டிருக்கும். தேரும்
அரசனுக்குரிய தேர் என்று தனிப்பட்ட வகையில் சிறப்பினதாக இருக்கும்.
எல்லாவற்றினும் சிறந்ததாதலின் முடி பிற்கூறப்பட்டது. அரசன் இவையாவும்
பெற்றிருத்தல் செங்கோல் செலுத்துதற்கே என்பது இறுதி அடியின்
கருத்தாகும்.’ என்பது பேராசிரியர் குறிப்பிடும் செய்தி.
 
     பிறவும் என்றதனால் ஆரமும் கழலும் கொள்வது உரையாசிரியர்
கருத்தாகும்.

ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தொல். பொ. 626. பே.