பாட்டியல் - நூற்பா எண் 171

365


 

கமகன் இலக்கணம்

 

931.  நிறைந்த கல்வியான் நிறைந்த அறிவான்

    அறைந்த ஒருபொருள் அதனை விரிக்க

    வல்லவன் கமகன் சொல்லுங் காலே.

 

இது கமகன் இயல்பு கூறுகின்றது.

 

     இ - ள்: நிறைந்த கல்விப் பயிற்சியானும் அக்கல்விப் பயிற்சியால்
தெளிந்த அறிவானும் முன்னர்க் கற்று வல்லோர் கூறிய பொருளை
ஞாபகத்தானும் செம்பொருள் நடையானும் நேரிட்டு எந்நூற் பொருளையும்
விரித்துச் சொல்லவல்லோன் கமகன் என்றவாறு.                                         

(171)

விளக்கம்

 

     ஞாபகம் - அறிவான் கூறப்படாத செய்தியையும் நுனித்து அறிதல்.

 

     செம்பொருள் நடையான் அறிதல் - நூலுள் கூறப்பட்ட செய்தியைக் கூறப்பட்டவாறு திரிபின்றி அறிவது.

 

     முன்னதற்கு நிறைந்த கல்விப் பயிற்சியும் பின்னதற்குத் தெளிந்த அறிவும் பயன்படும்.

 

     எனவே கமகன் சிறந்த போதகாசிரியன் ஆவான் என்பது.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘நிறைமதியான் கல்வியான் நீள்கலைகள் கல்லா

     தறையு மவன்கமக னாகும்.’                          

- வெண். பாட். செய். 46

 

     ‘நாட்டிய அரும்பொருள் செம்பொருள் நடையாக்

     காட்டியே வியவ கரிப்போன் கமகன்.’

                      - பி. ம. 52

 

     ‘ஞாபகம் செம்பொருள் நடையின்எப் பொருளும்

     அறைகுவோன் கமகனாம் வழுத்துங் காலே.’

                                         - மு. வீ. யா. ஒ. 62

                                                       171