368                      இலக

368

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

என்னும் வீட்டிற்கு ஏதுவாகிய உபாயங்களைக் கூறவே வீடும் கூறினானாம்
என்பது.

       (173)

விளக்கம்

 

     செஞ்சொல் - வெளிப்படையாக விளக்கிக் காணும் சொல். வீடுபேறு
துறவமாகிய காரண வகையால் கூறப்படுவது அல்லது, உலகிலுள்ள
தேயங்களைப்போல் இலக்கண வகையால் பரப்பு, இயற்கை அமைப்பு
முதலிய கூறப்படாதது ஆதலின் வீடுபேறு எய்துதற்கு உரிய ஏதுக்களே
கூறப்படும்.
 

      கேள்வி   -    அனுபவப்பொருளை ஞானதேசிகர் பால் உபதேசம் கேட்டல்.

 

       விமர்சம்  -   அச்செய்தியை ஆராய்ந்து தெளிதல்.

 

       பாவனை  -   அத்தெளிந்த பொருளைத் தியானம் செய்தல்.

 

        ‘கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

        மற்றீண்டு வாரா நெறி.’                      

- குறள். 356

 

  என்பது கேள்வியையும்.

 

       ‘ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

       பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.’                  

 - குறள். 357

 

  என்பது விமரிசத்தையும்.

 

    ‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

     செம்பொருள் காண்ப தறிவு.’                 

 - குறள். 358

 

என்பது பாவனையையும் விளக்கும். இக் குறட்பாக்களுக்கும் பரிமேலழகர்
வரைந்துள்ள உரையையும் நோக்குக.

 

     எனவே. ஞானாசாரியனே வாக்கி எனப்படுவான்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘நவிலும் அறம்முதல் நான்கு மயங்காமல்

     புவியதனில் நேட்டோர் புகழக் - கவிப்பனுவல்

     குன்றாத சொல்லால் தெளிவுபெறக் கூறுவோன்

     நன்றாய வாக்கியென் றார்.                           

- வெண். பாட். செ. 47