374                      இலக
374 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


  

கவிப் புலவன் இலக்கணம்

 

938. கற்கப் படுவோர் கடப்பாடு எய்தி

    நற்கவி நான்கொடு முத்தமிழ் நடைதெரிந்து

    இருபான் வயது தொடங்கி எழுபான்

    வயதின் ஏறா மாட்சிமை உள்ளோன்

    அகலக் கவிசொலும் ஆற்ற லோனே.

 

இது கவிப்புலவற்கு ஆவது ஒரு சிறப்புக் கூறுகின்றது.

 

     இ - ள் : கற்கப்படும் ஆசிரியருக்கு ஓதிய குலம் முதல் எண்வகை
முறையும் எய்தி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்று சொல்லும் நல்ல
கவி நான்கும் பாடும் தன்மையுடனே இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ்
என்னும் முத்தமிழ் வழக்கினையும் முற்ற உணர்ந்து இருபது முதல் எழுபதுவயதின் மிகாதிருக்கும் பெருந்தன்மை உடையோனே அகலக்
கவியைப் பாடும் உரவோன் என்றவாறு.

 

     ‘கற்கப் படுவோர் கடப்பாடு எய்தி’ என்றதனால் கூறாது ஒழிந்த
நற்குணங்கள் எல்லாம் உடையர் என்பதாம்.

            (178)

 

[ஆசிரியர் இயல்பைப் பொதுப்பாயிரத்தில் காண்க.]

 

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘இழுக்கிலா நாற்குலத்தோர் எப்பொருளும் தேர்ந்தோர்

     ஒழுக்கறம் தெய்வம் உடையோர் - விழுக்கவிகள்

     ஈரிரண்டு முத்தமிழும் வல்லோரே எஞ்ஞான்றும்

     சீரார் கவியுரைப்போர் சென்று.’                        

 - வெண். பாட். பொ. 7

 

    ‘சென்ற இரு பான்தொடங்கிச் சேருமெழு பானளவும்

    நின்றபரு வத்துறுப்பு நீங்காதோர் - ஒன்றில்

    அகலாப் பிணியில்லோர் அன்றோ பாக்கொண்டு

    புகலப் பெறுவார் புகழ்ந்து.’                           

 - வெண். பாட். பொ. 8