இலக்கண விளக்கம்
பொருளதிகாரம்
ஐந்தாவது - பாட்டியல்
____
பாட்டியல் நுவல்வன
761. எஞ்சிய இலக்கணம்
எல்லாம் சொல்லின்
மாத்திரை முதலா
யாத்துஇனிது அமைத்த
பாட்டின் இயலும்
நூலின் இயலும்
உரையின் இயலும்
பிசியின் இயலும்
முதுசொல் இயலும் மந்திர இயலும்
குறிப்புரை இயலொடு
திறப்படு மரபும்
வருணத்து இயலும்
புலவர் இயலும்
அவையின் இயலும்
அகலக் கவியைக்
கொடுப்போர்
இயலும் கொள்வோர் இயலொடு
அடுத்த ஈரேழும்
பிறவுமாம் என்ப.
என்பது சூத்திரம். நிறுத்த
முறையானே அகத்திணை இலக்கணமும்
புறத்திணை இலக்கணமும் அணி இலக்கணமும் செய்யுள் இலக்கணமும்
உணர்த்தி அந்நான்கற்கும் பொதுவாய் எஞ்சிநின்ற அகலக்கவி
இலக்கணமும், அளவியற்படாத ஏனை
அறுவகைச் செய்யுள் இலக்கணமும்
உணர்த்தினமையான் இவ்வோத்துப் பாட்டியல் என்னும் பெயர்த்து.
இதனான் மேல் ஓத்தினோடு இயைபு உடைமையும் விளங்கும்.
|