80

80

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


ஆசு கவி

 764.    எழுத்துச் சொற்பொருள் அணியாப்பு இவையின்

        விழுத்தக ஒருவன் விளம்பிய உள்ளுறை

        அப்பொழுது உரைப்பது ஆசு கவியே.

 

 இது நிறுத்த முறையானே ஆசுகவி இலக்கணம் கூறுகின்றது.
 

     [இ-ள்] ஒரு புலவன் இவ்வெழுத்தான் ஆதல், இச்சொல்லான் ஆதல்,
 இப்பொருளான் ஆதல், இவ்வணியான் ஆதல், இப்பாட்டான் ஆதல்,
 இவ்வெழுத்து ஆதி, இவ்வெழுத்து அந்தம், இச்சொல் ஆதி, இச்சொல்
 அந்தமாகப் பாடுவாய் என்றுகூற அப்போதே அவன் கருத்துக்கு ஒப்பப்
 பாடுவது ஆசுகவியாம் என்றவாறு.                             4

விளக்கம்

     நிறுத்தமுறை : சென்ற நூற்பாவில் நிறுத்தியமுறை. இதனை அடுத்த
 மூன்று நூற்பாக்களுக்கும் கொள்க.
 

 ‘எவன் ஒரு நொடியில் எண்ணாது இசைத்ததோர் செய்யுள்மற்றைக்
 கவிபன்னாள் நினைந்து சொற்ற சாத்திரங் கட்கு மேலாம்’
 

 என்ப ஆதலின் ஆசுகவி பாடுவோன் இறைவன் அருள் நிரம்பப்
 பெற்றவனாகக் கொண்டு சான்றோர், கவிகளுள் ஆசுகவிக்கு முதல் இடம்
 கொடுத்தனர் என்பது. ‘ஆசுகவியால் அகில உலகெங்கும், வீசுபுகழ்க் காள
 மேகமே’ என்பதனால் ஆசுகவி மக்களிடையே பெரிதும் புகழப்படுவான்
 என்பதும் உணரப்படும்.
 

ஒத்த நூற்பாக்கள்

    ‘கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில்

     எடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி.’                    

 - திவா - 12 - 48