வெட்சி-நிரைமீட்டல்
604. நிரைகோட் கேட்ட குரைகழ லரசன்
விரைசெலன் மறவரை மீட்கெனப் பணித்தல்
படையியங் கரவம் பறவாப்புட் டெரித
னடைவயிற் சேற னன்குண ருசாஅப்
புறத்திறை யதனொடு திறப்படப் பொருதல்
புண்ணொடு வருதல் போர்க்களத் தொழித
லாளெறி பிள்ளை பிள்ளைத் தெளிவு
பிள்ளை யாட்டொடு கையறு நிலையே
நெடுமொழி கூறல் பிள்ளைப் பெயர்ச்சி
வேத்தியன் மலிபொடு மிகுகுடி நிலையே
யாபெயர்த்துத் தருதலோ டருஞ்சமர் விலக்கல்
நலிவின் றுய்த்த னண்ணுவழித் தோற்ற
நிறைத்தல் பாதீ டுண்டாட்டுக் கொடையொடு
துடிநிலை கொற்றவை நிலையவை யிரண்டுங்
கூட்டுத லுறுத்த மீட்டனர் கோட
லேழுதலைப் பெய்த விருபதிற் றுறைத்தே.
இது முற்கூறிய வெட்சிப்பகுதி இரண்டனுட் பின்னையது
இத்துணைத்துறையுடைத்தென்கின்றது.
(இ - ள்.) நிரைகோட்கேட்ட குரைகழலரசன் விரைசெலன் மறவரை
மீட்கெனப்பணித்தல் முதலியவற்றொடு
துடிநிலையுங் கொற்றவை
நிலையுமாகிய அவ்விரண்டினையுங் கூட்டி எண்ணுதலால் மீட்டனர் கோடல்
இருபத்தேழு துறையினையுடைத்தாம், எ-று.
1. நிரைகோட்கேட்ட குரைகழலரசன் விரைசெலன் மறவரை
மீட்கெனப் பணித்தற்குச் செய்யுள்:-
“அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண் டற்றாற்-செழுங்குடிக
டாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோட
னேரார்கைக் கொண்ட நிரை” [பு. வெ. கரந். 1]
எனவரும். செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து நேரார்
கைக்கொண்ட நிரை தாங்கோடல்
அழுங்கல் நீர் வையகத்து ஆருயிரைக்
கூற்றம் விழுங்கியபின் விடுதல் கொண்டாற்போல அரிதாகலான்
விரைந்து
மீட்பீராக என்பது குறிப்பெச்சமாகப் பொருளுரைத்துக் கொள்க. |