வாடுறு நறவின் சாடி தோறுங்
கொள்வினை மாற்றாக் கொடையொடு
கள்விலை யாட்டியுங் கைதூ வாளே”
[தொல். பொ. புறத். 3. நச்.]
எனவரும்.
25. கொடைக்குச் செய்யுள்:-
“கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே
முடித்தன னென்றிருந்த மூத்தோன்-கொடைக்கு
வரம்பில னென்றே மருண்டா னிரைகோட்
கரந்தையங் கண்ணியாற் கண்டு
[தொல். பொ. புறத். 3. நச்.]
எனவரும்.
26. துடிநிலைக்குச் செய்யுள்:-
“நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு
மொத்திலங்க மெய்ப்பூசி யோர்ந்துடீஇத்-தத்தந்
துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
குடிநிலை பாராட்டிக் கொண்டு” [தொல். பொ. புறத். 4. நச்.]
எனவரும்.
27. கொற்றவைநிலைக்குச் செய்யுள்:-
“அருமைத் தலைத்தரு மாநிரையு ளையை
யெருமைப் பலிகோ ளியைந்தா-ளரசனும்
வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்
றியாந்தன்மேற் சீறாம லின்று” [தொல். பொ. புறத். 4. நச்.]
எனவரும். (6)
2. வஞ்சித்திணை
605. வஞ்சி தானே முல்லையது புறனே
யெஞ்சா மண்ணசை வேந்தனை வேந்த
னஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. *
இது வஞ்சித்திணை முல்லைத்திணைக்குப் புறனென்பதூஉம் அதன்
பொருளுங் கூறுகின்றது.
(இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுள் வஞ்சித்திணை முற்கூறிய
அகத்திணை ஏழனுள் முல்லைத்திணைக்குப்
புறனாம்;
* தொல். புறத்திணை. 6 (இ) |