40 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

           
                       தும்பைத் திணை

        610. தும்பை தானே நெய்தலது புறனே
           மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்
           சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. *

     இது தும்பைத்திணை நெய்தற்றிணைக்குப் புறனென்பதூஉம் அதன்
பொருளுங் கூறுகின்றது.

     (இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுள் தும்பைத்திணை முற்கூறிய
அகத்திணை ஏழனுள் நெய்தற்றிணைக்குப் புறனாம். அது தனது வலியினை
உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறும் பொருளாகக் கருதி மேற்சென்ற
வேந்தனை அங்ஙனம் மாற்று வேந்தனும் அவன்கருதிய மைந்தே தான்
பெறுபொருளாக எதிர்சென்று தலைமையைத் தீர்க்குஞ்
சிறப்பினையுடைத்தென்று சொல்லுவர் ஆசிரியர், எ - று.

     புறத்திணை பலவற்றுள் ‘
தும்பை தானே நெய்தலது புறனே’ என
இதனைப் பிரித்தோதினார், நெய்தற்கு உரிய பெருமணலுலகம் போலக் காடும்
மலையுங் கழனியுமல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும்,
பெரும்பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழின்முடியுங்
காலமாதலானும் இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறுபோலக்
கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக்குறிப்பின்
அருள் பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குபவாகலானும்
ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டார் இரங்குபவாகலானும். பிற
காரணங்களானுமென்பது. எனவே, தும்பைத்திணை நெய்தற்றிணைக்குப்
புறனென்றல் ஆணை கூறலன்றாயிற்று. [ஆதலின்] இதனை மைந்துபொருளாகப்
பொருதலில் மண்இடையீடாகப் பொரும் வஞ்சிக்கும், மதில் இடையீடாகப்
பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார்.                                (12)

                 
தும்பைத் திணையின் றுறைகள்

         611. கருங்கழல் வேந்தன் செங்களங் கருதிப்
           பசுந்துணர்த் தும்பை வெண்பூச் சூடலுஞ்
           சூடிய பின்னர்த் தொடுகழல் வயவர்க்கு
           நாடுமுதல் கொடுத்த பீடுபெறு மரவமுந்
           தாஞ்செருப் புரியாத் தன்மையா லவரை

  
* தொல். புறத். 12 (இ)