இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]49

 

     கடிதெழு செந்தீக் கழுமினா ரின்னுங்
     கொடிதேகா ணார்ந்தின்று கூற்று”
               [பு. வெ. தும். 28]

எனவரும். கண்டிரள்வேல் - காம்பு கண் திரண்டவேல்.                (13)
 

5. வாகை


      612. வாகை தானே பாலையது புறனே
          தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
          பாகுபட மிகுதிப் படுத்த லென்ப.*

     இது வாகைத்திணை பாலைத்திணைக்குப் புறனென்பதூஉம் அதன்
பொருளுங் கூறுகின்றது.

     (இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுள் வாகைத்திணை முற்கூறிய
அகத்திணை ஏழனுட் பாலைத்திணைக்குப் புறனாம். அது கேடில்லாத
கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ள இயல்பை இரு வேறுபட
மிகுதிப்படுத்தல், எ - று.

     புறத்திணை பலவற்றுள் ‘வாகை தானே பாலையது புறனே’ என
இதனைப் பிரித்தோதினார், புணர்ச்சியினீங்கி இல்லறம் நிகழ்த்திப்
புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச் சுற்றத் தொடர்ச்சியினீங்கி
அறப்போர்செய்து துறக்கம்பெறுங் கருத்தினாற் சேறலானும், அன்றியும் பாலை
இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையால் நால்வகை நிலமும் பற்றி
நிலம்பெறுமாறுபோல முற்கூறிய புறத்திணை நான்கும்பற்றி வாகைத்திணை
நிகழ்தலானுமென்பது. எனவே, வாகைத்திணை பாலைத் திணைக்குப்
புறனென்றல் ஆணை கூறலன்றாயிற்று.                              (14)
 

வாகைத் திணையின் றுறைகள்

     

      613. அலைகடற் றானை யரசட் டிறையோ
          னிகல்புனை வாகை சூடலு மிகன்றோர்
          வெண்கண்ணி யொடுகருங் கழல்செங் கச்சினிப்
          புண்டவிர்ந் தாமெனப் புனைதரு மரவமு
          மைவகை மரபி னரச வாகையு
          மொய்கழ லான்பதி முரசுநிலை யுரைத்தலு
          மன்னனை யுழவனெனு மறக்கள வழியு

   * தொல். புறத். 15 (இ.)