6. காஞ்சி
614. காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. *
இது காஞ்சித்திணை பெருந்திணைக்குப் புறனென்பதூஉம் அதன்
பொருளுங் கூறுகின்றது.
(இ - ள்.) இது மேற்கூறிய புறத்திணை ஏழனுட் காஞ்சித்திணை
முற்கூறிய அகத்திணை ஏழனுட்
பெருந்திணைக்குப் புறனாம்; அஃது
ஒன்றற்கொன்று உரிமையாதல் அரிய சிறப்பினால் யாக்கை,
செல்வம்,
இளமை முதலிய பல நெறியானும் நிலையாத உலகியற்கையைப் பொருந்திய
நெறியினை
யுடைத்து; எ - று.
புறத்திணை பலவற்றுட் ‘காஞ்சி தானே பெருந்திணைப் புறனே’ என
இதனைப் பிரித்தோதினார்;
எண்வகை மணத்தினும் நான்குமணம் பெற்ற
பெருந்திணைபோல இக்காஞ்சியும் அறமுதலாகிய மும்முதற்பொருளும்
அவற்றது நிலையின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றிற்கும்
உரித்தாய் எல்லாத் திணைகட்கும்
ஒத்தமரபிற்றாகலானும் “பின்னர் நான்கும்
பெருந்திணை பெறும்” என்ற நான்குஞ் சான்றோர்
இகழ்ந்தாற்போல
அறமுதலியவற்றது நிலையின்மை உணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும்,
ஏறியமடற்றிறம்
முதலிய நான்கும் பொருந்தாக் காமமாயினவாறுபோல
உலகியனோக்கி நிலையாமை நற்பொருளன்றாகலானும்,
உரிப்பொருள்
இடமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணைபோல
அறம்பொருளின்பம்பற்றியன்றி
வேறு நிலையாமை யென்பதோர்
பொருளின்றாதலொப்புமையானுமென்பது. எனவே, காஞ்சித்திணை
பெருந்திணைக்குப் புறனென்றல் ஆணை கூறலன்றாயிற்று. (16)
காஞ்சித் திணையின் றுறைகள்
615. வருபடை நோனான் மடுத்தெதி ரூன்றக்
கருதிவே லுழவன் காஞ்சி சூடுதலு
மேல்வரு படைவர மிகவு மாற்றா
வேல்வ லாடவர் விறன்மிகுத் தெதிர்தலும்
வந்துபுலத் திறுத்தோர் வரம்பு கடவாமைத்
தந்தங் கடவை தழீஇய தழிஞ்சியும்
* தொல். புறத். 18 (இ) |