சுவாமிநாதம்113சொல்லதிகாரம்
 

     உரை : முற்றாக இல்லாமல் முடிப்பதற்குப் பிறசொல்லை எதிர்பார்ப்பது
எச்சமாகும். செய் என்னும் வாய்பாட்டின் இறுதியில் சேய்மைச் சுட்டைக்
குறிக்கும் அகரமும் நடுவில் கால இடைநிலையும் எதிர்காலத்திற்கு உம் ஈறும்
பெற்று வருவது பெயரெச்சம். அது, செய்த, செய்கின்ற செய்யும் என மூவகை
வாய்பாட்டில் வரும். வினை செய்பொருள், வினை முதல் (செய்வோன்), நிலம்,
கருவி காலம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயரைக் கொண்டு முடியும்.

விளக்கம் :

     பெயரெச்சம்

     நடந்த நடை     - வினை கொண்டு முடிந்தது.

     படித்த நூல்      - செயப்படுபொருள் (ஒருவர் நூலைப் படித்தார்)

     படித்த ஆசிரியர்  - வினை முதல் (ஆசிரியர் நூலைப் படித்தார்)

     படித்த பள்ளி     - இடம் (ஒருவர் பள்ளியில் படித்தார்)

     படித்த ஆண்டு    - காலம் (ஒருவர் [இந்த] ஆண்டில் படித்தார்

     படித்த கண்ணாடி - கருவி (ஒருவர் கண்ணாடியால் படித்தார்)

     பெயரெச்சத்திற்கும் பெயருக்கும் உள்ள இலக்கண உறவே அதாவது
அடிப்படை வாக்கியத்தில் அமைந்த இலக்கண உறவே பெயரெச்சத்தைக்
கொண்டு முடியும் பெயரின் பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     செய்த என்ற பெயரெச்ச வாய்பாட்டில் இறுதி அகரத்தைப் பெயரெச்ச
விகுதி என்பர் மொழியியலார். இவர் சேய்மைச்சுட்டு என்பது புதுமையானது.