சுவாமிநாதம்130சொல்லதிகாரம்
 

     துவைக்கும் என்ற வினைச்சொல் துவை என்ற உரிச் சொல்லடியாய்ப்
பிறந்தது.

      நனி பேதை - பெயர்க்கு முன் வந்தது.

     நனி தின்றான் - வினைக்கு முன் வந்தது.

     ‘கரும்புனல் சாஅய்’ (நெடுநல். 18) - இங்கு புனல் என்ற
பெயர்ச்சொல்லிற்குப் பின் சாய் என்ற உரிச்சொல் வந்தது.

(ஓய்தல், ஆய்தல் நிழத்தல் சாய்தல் உள்ளதன் நுணுக்கம் இ.வி. 281.)

‘வியன் மார்பன் அணங்கிய செல்லல்’ (அகம்.22.3) - இங்கு அணங்கிய
என்ற பெயரெச்சம் ‘செல்லல்’ என்ற உரிச்சொல்லுக்கு முன்வந்தது (செல்லல்
இன்னல் இன்னாமை செப்பலும் இ.வி. 281.3) ஒரு சொல் பலபொருள்: கடி
என்ற சொல் வரைவு, கூர்மை, காப்பு, புதுமை போன்று பல பொருள்
உடையது (தொல். சொல். 38.3). ஒரு பொருளுக்குப் பல சொல் : மிகுதிப்
பொருள் உறு, தவ, நனி போன்று பல சொல்லால் உணர்த்தப்படும். (தொல்
சொல் 299).

     இச்சூத்திரம் நன்னூல் 454, இலக்கண விளக்கம் 280, 291 (தொல்.
சொல். 391) ஆகியவற்றைத் தழுவியது. நன்னூலில் குறிப்பிடாத, பெயருக்கும்
வினைக்கும் அடிச்சொல்லாக உரிச்சொல் வரும் என்ற கருத்து இலக்கண
விளக்கத்தில் (280.2) பேசப்படுவது இங்கு கூறப்பட்டுள்ளது.

     தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சொல்லின் கருவாக அமையும்
அடிச்சொல்லையே உரிச்சொல் குறிக்கின்றது என்று கருதுவதும் இக்
கருத்திற்கு அரண் செய்கின்றது. (இலக்கண ஆய்வுக் கட்டுரைகள்-1.
‘உரிச்சொல்’ பக்கம் 123)