ஒரு பொருள்மேல் அடுக்கி வந்தால் அது வஞ்சித்தாழிசை எனப்படும். இருசீரடி நான்காய் ஒரு பொருண் மேல் ஒன்றே வந்தால் அது வஞ்சித்துறை எனப்படும். மூன்று சீரடி நான்காய் வருவது வஞ்சிவிருத்தம் எனப்படும். 161. | சீர்தளைகெட் டிடில்குறுகு(ம்) உவ்வியும்அப் பெயருஞ் சிலஒற்றும், அளபும்,அலகு ஏறாவாம் சந்தம் சார்வுறிற்சீர் பார்தளைதீர் பல்ஒற்றுஓர் ஒற்றாந் தனிக்குறிலாம் குறளையென வொற்றளபும் பலநேர், பேரும்உயி ரளபுஇருநே ராம்,குறில்விட் டிசைக்கிற் பிறபிறவொடு உறழும்வெள் ளையடிதளைசீர் உறழாது ஆர்வனப்பு, வகையுளியாம், முதுசொல்,வசை வாழ்த்து, அம்மானை, முதல்வொப்பால, வருங்காலச் செயுளே. [6] | ஒழிபியல் உணர்த்துகின்றது. உரை: செய்யுளில் சீரும் தளையும் பொருந்தாமல் கெட்டு வந்தால் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் மெய்யெழுத்துக்களும் அளபெடையும் அலகிடும்போது விலக்கிவிடவேண்டும். சந்தம் பொருந்தி வருமானால் பல ஒற்றுக்கள் சேர்ந்துவருவது ஒரு மெய்யெழுத்தாகவும் ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்துப் போலவும் ஒளகாரக் குறுக்கமும் ஒற்றளபெடையும் தனிக்குறில் போலவும் உயிரளபெடை இரு நேரசையாகவும் கருதப்படுவது உண்டு. குற்றெழுத்து விட்டிசைக்குமானால் பிறவற்றொடு மாறுபட்டு வரும். பிறவகைப்பாடல்களில் வெண்பா அடிவந்து மயங்கும். பிறபாக்களின் சீரும், தளையும் வெண்பாவில் வந்து கலவா. வனப்பு, அம்மானை, ஒப்பு, காலம் முதலியனவும் செய்யுளில் வரும். |