சமாதான உருவகம் தெளிவாக விளங்கவில்லை. இது தண்டியலங்காரம் 36, 37 ஆகிய இரண்டையும் தழுவியது. ஆயினும் உருவகத்தின் விரி, தண்டியலங்காரம் பதினைந்து என்று கூறச் சாமிநாதம் வரையறுக்காமல் விட்டுச் செல்கின்றது. 187. | சமப்பொருட்குச் சிறப்படைரூ பித்தவற்றால் பொருளைத் தானுரூபித் தல்சிறப்பாங், கூடாக்கு ணங்கள் அமைத்தல்விரூ பகம்அங்க முழுதுரைத்தல் முற்றாம், அவையவமும், அவையவியும் தனித்தனியேல் அவையாஞ், சிமிழ்க்கும்உரு பகம்இன்னும் பலகருதும் பொருளின் திறந்தொகுத்துஒப் பாலதனைப் புலப்படுத்தல் ஒட்டாம்; இமைக்கும்அடை யும்பொருளும் அயற்படுத்தல், பொதுவாய் இயம்பல்,விர வித்தல்,விப ரிதப்படுத்த லாமே [9] | உருவகத்தின் விரியும் ஒட்டணியும் விளக்குகின்றது. உரை : ஒரு பொருளை எடுத்து அதற்குச் சிறந்த அடைகளை உருவகம் செய்து அவற்றால் பொருளை உருவகம் செய்தல் சிறப்பு உருவக அணி. ஒரு பொருளுக்குப் பொருந்தாத தன்மையைக் கூட்டி உருவகம் செய்தால் விரூபக உருவக அணி. உடல் உறுப்புக்களை முழுவதும் உருவகப்படுத்துதல் முற்று உருவக அணி. உடல் உறுப்புக்களை (அவையவம்) உருவகம் செய்வது அவையவ உருவக அணி. உடல் முழுவதும் (அவையவம் உடையது அவையவி) உருவகம் செய்வது அவையவி உருவக அணி. தான் கூறக்கருதிய பொருளின் திறத்தை மறைத்து அதற்கு ஒப்பான பிறிது ஒன்றின் மூலமாக வெளிப்படுத்திக் கூறுவது ஒட்டணி. 1. கூறுகின்ற பொருளும் அதனது அடையும் வேறுபடும்படிக் கூறுதலும், 2. அடையை வேறுபடுத்திப் பொருளைப் பொதுவாகக் கூறுதலும், 3. அடையை ஒன்றோடொன்று கலந்து கூறுதலும், 4. விபரீதப்படுத்திக் கூறுதலும் என நான்கு வகையாக ஒட்டணியைக் கூறலாம். |