சுவாமிநாதம்99சொல்லதிகாரம்
 

     விளக்கம் : தமன், தமள், தமர், நமன், நமள், நமர், எமன் (எம்மவன்)
எமள் என்பன கிளைப்பெயர்கள்.

     தமர்கள் என்பது தமர்காள் என்றும் நமரங்கள் என்பது நமரங்காள்
என்றும் கள் விகுதி பெற்ற பின் விளிவேற்றுமை ஏற்றன.

     ‘யாம் ஒன்றிடத்து ஒன்றே ஆதியாம்’ என்பது என்னவென்று
விளங்கவில்லை.

     உருபும் பயனிலையும் இயைந்து வருவது பொருள் மயக்கம் என்றது
உருபேற்ற சொல் அதற்குரிய அடிப்படை உருவிலும் வரலாம் என்பதைக்
குறிக்கும். அதாவது இரண்டு வேற்றுமை உருபுகளும் வரத் தகுதி உடையன
என்பது பொருள்.

     குறை என்ற வினைச்சொல் இரண்டாம் வேற்றுமைக்குரியது. அது
ஏழாம் வேற்றுமையும் ஏற்று வரும்.

     கோட்டைக் குறைத்தான்.
     கோட்டின்கண் குறைத்தான்.

எப்பொழுதும் இரண்டு வேற்றுமையும் இரண்டு வேறு பொருளைத் தருவது
(மரத்தை வெட்டினான், மரத்தில் வெட்டினான்) இங்கு ஒரே பொருளைத்
தருவதால் சமனாதல் (Neutralisation) என்று மொழியியலார் விளக்குவர்.
ஆகவே, பொருள் மயக்கம் என்பது சமனாதல் என்று கொள்ளலாம்.

     வந்த உருபின் பொருளொடு தொடர்பில்லாத வேறு ஒரு உருபின்
பொருளே தருவதால் உருபு மயக்கத்தில் உருபும் பொருளும் இயைபு
படவில்லை என்று கூறியுள்ளார். அதாவது புதைநிலையில் உள்ள வேற்றுமை
உருபு இல்லாமல் வேறு ஒரு உருபே அப்பொருளை உணர்த்துவதால்
வேற்றுமை உருபு பிளவுபட்டதாகக் கருதுவர். எனவே உருபு மயக்கத்தைப்
பிளவு படல் (Diversification) என்று மொழியியலார் விளக்குவர்.