விளக்கம் : ‘எண்ணுதற்கும் பெயர் கருவியாதலின் அதனை முற்கூறாதது முறையன்று’ என்று சிவஞானமுனிவர் இலக்கண விளக்கச் சூறாவளியில் (பக். 65) கூறப்பட்ட கருத்தை மனதில் கொண்டுதான் நன்னூலார் கூறிய ‘எண் பெயர் முறை’ என்ற முறையை மாற்றிப் ‘பெயர் எண் முறை’ என்று இவ்வாசிரியர் கூறியுள்ளார். மொழிக்குக் காரணமாகி வரும் நாதகாரிய ஒலி என்பது இலக்கண விளக்கத்தை ஒட்டியது. ‘மொழிக்குக் காரணமா நாதகாரிய ஒலி’ (இ. வி. 3) என்ற வரி ஒப்புநோக்கத்தக்கது. 15. | அகராதி யீராறும் உயிர், ககராதிகண் மூவாறும் உடல்;இம் முப்பானு(ம்) முதலெழுத்தாம்; ஆய்த(ம்) இகல் குறளின் இஉஐஒளவே ஆய்த(ம்) மவ்ஓரொன்றாய் உயிர்மெய் நூற்றெணிநட்டு, (உ)யிரளவு ஏழ்; ஒற்றின் உகுமளபு பதினொன்றொடு (இ)ருநூற்று நாற்பானொன்று சார்பெழுத்து இருநூற்று எழுபத்தொன்றெண்ணாகும் புகலுமிட(ம்) முயற்சி பொருள் அளவு (உ)ரு ஏற்பனவே பொருந்தும் இனஞ்சிறப்பாலவவாதி முறையணுமே. (3) | எழுத்துக்களின் எண்ணும் முறையும் விளக்குகின்றது இச் சூத்திரம். உரை : அகரத்தை முதலாக உடைய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர்; ககரத்தைமுதலாக உடைய பதினெட்டும் மெய்; ஆக முதலெழுத்து முப்பது ஆகும். ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகியவை ஒவ்வொன்று; உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; உயிரளபெடை ஏழு; ஒற்றளபெடை பதினொன்று; ஆக சார்பெழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தொன்று. இடம், முயற்சி, பொருள், மாத்திரை, வடிவம் ஆகியவற்றுள் ஏற்பன, பொருந்துகின்ற இனத்தாலும் சிறப்பாலும் அகர முதலாக நடத்தலே முறை என்று கூறப்படும். |