சுவாமிநாதம்172பொருளதிகாரம்
 

     விளக்கம் : நம்பியகப்பொருள் 29, 32, 34, 35, 36, ஆகிய
சூத்திரங்களை அடியொற்றியது இது.

     ‘காட்சி முதலாகச் சாக்காடு ஈறாகச் சொற்ற பத்து’ என்பது காட்சி,
வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல். ஆக்கம் செப்புதல், நாணுவரை
இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு
என்று நம்பியகப்பொருள் உரையில் விளக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேட்கை
முதல் சாக்காடுவரை ஒன்பது வகையும் தொல்காப்பியத்தில் (களவி. 9)
காணப்படுகின்றன.

82. உரியபகற் குறிஇரவுக் குறிபுணர்ச்சி க்குஇடன்வீடு
     ஒழிதல்பகற் குறி;வீட்டின் எல்லைஇராக் குறியாம்
புரியுமொரு வழித்தணத்தல், வரைவுஇடையே வைத்துப்
     பொருட்பிரிதல் எனஇரண்டு(ம்) மறைப்பிரிவாம்; ஒருகாற்
பிரிவினுக்குப் பருவம்இலை; ஏனையதுஓர் இருதாம்;
     பெருங்களவு வெளிப்படுமுன் பின்வரைவுஉண் டாகும்
வரைவுமறை, காப்புமிகை யாற்றுஅச்சம் வேற்று
     வரைவுநேர் வுறில்தோன்றும் அறத்தொடு நிலையே.  [12]

இது களவுப் புணர்ச்சி பற்றிய விளக்கம் கூறுகின்றது.

     உரை : புணர்ச்சி நிகழும் இடம் பகற்குறியும் இரவுக்குறியும் என
இரு பகுதியினை உடையது. வீட்டின் எல்லையைக் கடந்தது பகற்குறி.
வீட்டின் எல்லைக்குள் இரவுக்குறி நடைபெறும். ஒரு வழித் தணத்தல்,
வரைவிடைவைத்துப் பொருள் வயிற்பிரிதல் என இரண்டு வகையாகும்
களவுப் புணர்ச்சி. ஒரு வழித்தணத்தலுக்குப் பருவ வரையறை இல்லை.
வரைவிடை வைத்துப்பொருள் வயிற்பிரிவுக்கு இரண்டு மாதம் (ருது)
காலமாகும். களவு வெளிப்படா முன்னும் வெளிப்பட்ட பின்னும் மணம்
செய்து கொள்ளுதல் உண்டாகும். உறவினர் வரைவு எதிர் கொள்ளாத
இடத்தும் காவல் மிகுந்த இடத்தும் தலைமகள் தலைமகன் வரும் வழியில்
ஏற்படும் துன்பத்திற்கு அஞ்சியவிடத்தும், பிறர்வரைவு நேருமிடத்தும்
அறத்தொடு நிலை தோன்றும்.