சுவாமிநாதம்18எழுத்ததிகாரம்
 

     விளக்கம் : சார்பெழுத்துக்களின் எண்ணிக்கையை இலக்கண
விளக்கத்தை ஒட்டிக்கூறினும் அவர்கூறாத ஆய்தக் குறுக்கத்தையும் சேர்த்துக்
கொண்டுள்ளதால் 241 என்று இலக்கண விளக்கத்தைக் காட்டிலும் ஒரு எண்
மிகையாக உள்ளது. நன்னூலார் சார்பெழுத்துக்களின் வருமிடத்தையும்
சேர்த்துக் கொண்டதால் எண்ணிக்கை மிகுதியாயிற்று. முறை பற்றிய கருத்து
பெரும்பான்மையும் நன்னூலையொட்டியது.

     பா. வி.: ஒற்றளபு என்பது தான் ‘ஒற்றினுகுமளபு என்று மூலத்தில்
காணப்படுகின்றது.

16. அணுவினான் மூலவிந்தில் எழுநாதம் இலஞ்சிக்
     காய்உதானத்தொடு நெஞ்சணுகி வெளிவாக்காற்
பணியு மிடறு (உ)ச்சி மூக்கு ஒலித்து நாவண்ணம்
     பல்லிதழின் வினையால் வெவ்வேறெழுத்தாம். அவற்றுள்
நணுகு மிடற்று(உ)யிர் இடை, யுச்சியின் வன்மை, மென்மை
     நாசியில் உண்டாம். அவற்றுள் அஆவங்காப்பாம்
துணி இ, ஈ, எ, ஏ, ஐ அண்பல் அடிநாப்பாற்றொடும்
     உ, ஊஒ, ஓ, ஒள இதழ்குவிமாம் அணங்கே.      (4)

எழுத்துக்களின் பொதுப்பிறப்பும் உயிரெழுத்துக்களின் சிறப்புப்பிறப்பும்
கூறுகின்றது.

     உரை : அணுவினால் மூலவிந்தில் எழுகின்ற ஒலி கொப்பூழ், நெஞ்சு
ஆகிய இடங்களை நெருங்கி வெளியே புறப்பட்ட ஒலியால் மிடறு, தலை,
மூக்கு ஆகிய இடங்களில் ஒலித்து நாக்கு, அண்ணம், பல், இதழ் ஆகிய
உறுப்புக்களின் செயலால் வெவ்வேறு எழுத்துக்களாக மாறும். மிடற்றில்
உயிரும் இடையினமும், உச்சியில் வல்லினமும், மூக்கில் மெல்லினமும்
உண்டாகும். அகர ஆகாரம் வாயைத் திறந்து கூறும் முயற்சியாலும் இ, ஈ, எ,
ஏ, ஐ ஆகியவை அண்பல்லை நாவினது அடி (விளிம்பு) பொருந்துவதாலும்
உ, ஊ, ஒ, ஓ, ஒள என்பன இதழ் குவிதலாலும் பிறக்கும்.